தரவு என்பது கணினியால் அல்லது பிற இயந்திரத்தால் செயலாக்கப்படக்கூடிய தகவல் அல்லது உண்மைகளைக் குறிக்கிறது. இது உரை, எண்கள், படங்கள், ஆடியோ அல்லது வீடியோ எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம்.

தரவை சேகரிக்கலாம், சேமித்து வைக்கலாம், பகுப்பாய்வு செய்யலாம் என்பதுடன் முடிவுகளை எடுப்பதற்கு அல்லது நுட்பமான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதற்குப் பயன்படுத்தலாம். சென்சார்கள், பயனர் உள்ளீடு மற்றும் வெளிப்புற தரவுத்தளங்கள் எனப் பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவைப் பெறலாம். இந்தத் தரவுகள் நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களால் மதிப்புமிக்கச் சொத்தாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இத்தரவுகளை வைத்து சிறப்பாக முடிவெடுக்கலாம், போட்டி நிறைந்த உலகில் அனுகூலத்தைப் பெறலாம் என்பதுடன் புதுமையான விஷயங்களையும் செயல்படுத்தலாம்.

தரவுப் பாதுகாப்பு என்பது அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு, வெளிப்பாடு, இடையூறு, மாற்றம் அல்லது அழிவு ஆகியவற்றிலிருந்து முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. தரவு விதிமீறல்களைத் தடுப்பதற்கும் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் குறியாக்கம் செய்வது, ஃபயர்வால்கள் பயன்படுத்துவது மற்றும் அணுகல் கட்டுப்பாடுகளை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் தரவுப் பாதுகாப்பில் அடங்கும்.

தரவுப் பாதுகாப்பு என்பது தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியமான அம்சம் என்பதுடன் மிக முக்கியமான தகவல்களின் இரகசியத்தன்மை, நேர்மை மற்றும் அணுகல் தன்மையைப் பேணுவதற்கு அவசியமாகும்.